Saturday, February 18, 2006

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

ரயில் ஓடிக் கொண்டிருந்தது.
வெளியில் ஒரு கோபுரம் தெரிந்தது.
பெரியவர் ஒருவர் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
தன் பேரனையும் போடச் சொன்னார்.

பக்கத்தில் இருந்தவரிடம்,
"கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்" என்றார்.

சக பயணி இதைக் கேட்டு சிரித்தார்.
"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்றார் பெரியவர்.

"ஐயா! அந்த ஊரில் குடியிருப்பவர்களுக்கு தினமும் கோபுர தரிசனம் தான்.
ஆனால் புண்ணியம் மட்டும் கிடைக்கவில்லையே? அது மட்டுமில்லை..தாழ்த்தப்பட்ட மக்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டு தூரத்தில் இருந்து கும்பிட்டு விட்டுப் போ என சாதி ஆதிக்கத்தோடு செய்யப்பட்ட சதி இது" என்றார்.

சக பயணிகள் சிந்திக்கத் தொடங்கினர்.

நன்றி: தீக்கதிர் 18.02.2006
சிந்தனை வங்கி
சு.பொ.அ

Sunday, February 12, 2006

கழுகுகளும் கரடிகளும்

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு அடுத்த மே முதல் வாரத்தில் தேர்தலாம்.
கூட்டணிகளில் குழப்பமாம்..கலைஞர் திணறுகிறாராம்.. ஜெயலலிதா வலை வீசுகிறாராம்.

மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாராம். ஒவ்வொரு பேப்பரும் ஒவ்வொரு கதை சொல்றாங்க..

பத்திரிகைகள் விடற கதையை விட தலைவர்கள் விடற கதை இன்னும் சூப்பர்.. இதையெல்லாம் கதை கேக்கற மனசு இருக்கறவங்க மட்டும் தான் புரிஞ்சுக்க முடியும்..

ஜெயலலிதா ஒரு கரடிக் கதை சொன்னாங்க.. கலைஞர் அதை திருப்பிப் போட்டு அந்தக் கரடி அம்மாதான்றாரு..

காளிமுத்தண்ணன் வேற தேச வலம் புறப்பட்டிருக்கிறாரா? அவர் வேற கதை கதையா சொல்லிட்டிருக்காரு..

சிவப்புக் கொடி வைச்சிருக்கறவங்க கழுகுப் பார்வையோட “கழுகு” சர்வதேச அளவுல எப்படி உயிர்களைக் கொத்திக் கொத்திப் போடுதுன்னு சொல்றாங்க.. அது கதை மாதிரித் தெரியலே.. நிஜம்னு நம்பறதுக்கு பத்திரிகைகள் இடம் கொடுக்க மாட்டேங்குது..

“12 வருஷமா விதை விதைத்தோம்.. இப்போ விளைச்சலை அறுவடை செய்யக் காத்திருக்கோம்.. இதுவரை விவசாயியா இருந்தோம்..இனிமேல் வியாபாரியா மாறப் போறோம்” ஒருவர் புதிர் போடறாரு..

“எவ்வளவு நெருங்கிய சொந்தமா இருந்தாலும் கவனிக்காம விட்டுட்டா உபசரிப்பு பலமா இருக்கற இடத்துக்கு போயிடுவாங்க” ன்னு வாழ்க்கைத் தத்துவம் சொல்றாங்க..

அடுத்த ரெண்டு மாசமும் பேச்சு பேச்சு பேச்சு தான்.. கதை கதை கதைதான்.. குட்டிக் கதைகள்.. இதிகாச கதைகள்.. பைபிள் கதைகள்.. வேறு புத்தகங்களில் இருந்து வசனங்கள்.. (ஒவ்வொரு தொகுதிலயும் யார் 2006 தேர்தல்ல எம்.எல்.ஏ ன்னு எழுதி வைச்சிருக்கு)..

நான் தான் எஞ்சின்.. நீயெல்லாம் கேரேஜ்.. ஆஹா ஹா எக்ஸ்ட்ரா கேரேஜ்…
இல்லை இல்லை இது எக்ஸ்ட்ரா லக்கேஜ்தான்..இதைத் தூக்கி சுமந்தா என்ன லாபம்.. தூக்கி வீசுனா என்ன லாபம்னு வியாபாரிகள் கணக்கு போட ஆரம்பிச்சுட்டாங்க..

சுமை அதிகமா இருந்தா தூக்கி வீசிட வேண்டியதுதான்.. ஆனா எது சுமைன்னு தெரியாம வண்டியோட ஸ்டீயரிங்கைக் கழற்றி வீசிடாதீங்கன்னு சில பேரு புலம்பவும் ஆரம்பிச்சுட்டாங்க..

கரடி பற்றிய கதைகள்னு சொல்றதா, கதைவிடும் கரடிகள்னு சொல்றதான்னு அங்கங்கே விவாதங்கள் நடக்குதாம்ல.. தாயத்து வியாபாரம் பலமா கீதாம்.. “இந்தத் தாயத்து வாங்கி கையில் கட்டினா உன் எல்லா பிரச்னையும் தீர்ந்து போகும்”னு தாயத்து வாங்க மக்களை அறைகூவி அழைப்பாங்க…மக்கள் ஏமாந்துடக் கூடாதேன்னு அழுகையா வருது..

எது எப்படியோ கழுகுகளும் கரடிகளும் ரோட்டுக்கு வரும்போது மக்கள் பாதுகாப்பா இருக்கணுமேன்னு கவலையா இருக்குது..அதுக்காக பாதுகாப்பான இடம் சினிமா தியேட்டர்தான்னு அங்கே போய் அடைஞ்சிடக் கூடாது.. என்ன நான் சொல்றது?